عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Event, The Inevitable [Al-Waqia] - Tamil Translation - Abdulhamid Albaqoi

Surah The Event, The Inevitable [Al-Waqia] Ayah 96 Location Maccah Number 56

1. (யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,

2. அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.

3. அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்.

4. (அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,

5. மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்.

6. அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.

7. (அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.

8. (முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)

9. (இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.)

10. (மூன்றாவது:) முன்சென்று விட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற அனைவரையும்விட) முன்சென்று விட்டவர்கள்.

11. இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.

12. இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.

13. (இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,

14. பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.

15. பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,

16. ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

17. என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்;

18. இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).

19. (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது.

20. இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்,

21. விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்).

22. (அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள்.

23. அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்.

24. இவை அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்.

25. அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்.

26. ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.

27. வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்,

28. முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்,

29. (நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்,

30. அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்.

31. அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்,

32. ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு.

33. அதன் கனிகள் (புசிக்க) தடுக்கப்படாது, (பறிப்பதால்) குறைவுறாது.

34. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்).

35. (அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்.

36. கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கிறோம்.

37. அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.

38. (முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்.

39. (இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்,

40. பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்.

41. இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே!

42. (அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,

43. அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.

44. (அங்கு) குளிர்ச்சியான குடிபானமும் இருக்காது; கண்ணியமான (உணவு) எதுவும் இருக்காது.

45. இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்.

46. எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.

47. மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?

48. (அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர்.

49. (நபியே!) கூறுவீராக: நிச்சயமாக (உங்களில்) முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும்...

50. (நீங்கள் யாவருமே) அறியப்பட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் (தவறாமல் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

51. பிறகு, (கூறப்படும். இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்,

52. கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்.

53. இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்.

54. அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்.

55. (அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்.

56. கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்.

57. (வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கிறோம். (ஆகவே, மறுமுறை நாம் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?

58. நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

59. அதை (சிசுவாக) நீங்கள் படைக்கிறீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா?

60, 61. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.

60, 61. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.

62. முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)

63. (நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா?

64. அதை, நீங்கள் (முளைக்க வைத்துப்) பயிராக்குகிறீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா?

65. நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

66. ‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,

67. மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்).

68. நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?

69. மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா?

70. நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

71. நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா?

72. அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா?

73. (நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப்போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதை நாம்தான் படைத்திருக்கிறோம்.

74. ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரைக்கொண்டு நீர் (அவனை) புகழ்வீராக!

75. நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம்.

76. மனிதர்களே! (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

77. நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.

78. (இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

79. பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்.

80. உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது.

81. ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகிறீர்களா?

82. அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கிறீர்களா?

83. (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,

84. அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கிறீர்கள்.

85. ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கிறோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை.

86. நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்...

87. மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே!

88. (இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால்,

89. அவருக்குச் சுகமும் மகிழ்ச்சியும் நறுமனமும் உண்டு; இன்பமளிக்கும் சொர்க்கமும் உண்டு.

90. (அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,

91. அவரை நோக்கி ‘‘வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உமக்கு ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்.

92. அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்,

93. முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்.

94. இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்.

95. நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்.

96. ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக!