The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Ranks [As-Saff] - Tamil Translation - Abdulhamid Albaqoi
Surah The Ranks [As-Saff] Ayah 14 Location Madanah Number 61
1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
2. நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக பிறரிடம்) ஏன் கூறுகிறீர்கள்?
3. நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கிறது.
4. (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.
5. மூஸா தன் மக்களை நோக்கி ‘‘என் மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே'' என்று கூறியதை (நபியே! நீர்) நினைத்துப் பார்ப்பீராக. (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை.
6. மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர் ஆவேன். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் ‘அஹ்மது' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
7. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதை நிராகரிக்)கிறான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
8. அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.
9. அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணை வைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்ன்ற தீரும்.
10. நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
11. (அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
12. (அவ்வாறு செய்தால்) உங்கள் பாவங்களை மன்னித்து, சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்துவான். அவற்றில் நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். மேலும், நிலையான சொர்க்கத்திலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
13. நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
14. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்ட சமயத்தில், ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்'' என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர்தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றி பெற்றவர்களாகிவிட்டார்கள்.