عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The rising of the dead [Al-Qiyama] - Tamil Translation - Abdulhamid Albaqoi

Surah The rising of the dead [Al-Qiyama] Ayah 40 Location Maccah Number 75

1. மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

2. (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.

3. (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?

4. அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.

5. எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.

6. (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.

7. அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,

8. சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,

9. (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),

10. அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.

11. ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).

12. (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.

13. மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.

14. தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.

15. ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).

16. (நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.

17. ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.

18. ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.

19. பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

20. எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.

21. (ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.

22. அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.

23. (அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.

24. வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.

25. (பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.

26. எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,

27. (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.

28. எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.

29. (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.

30. அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.

31. (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.

32. ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.

33. பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.

34. (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!

35. பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!

36. (ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?

37. அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?

38. (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.

39. ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.

40. (இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?