The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Sundering, Splitting Open [Al-Inshiqaq] - Tamil Translation - Abdulhamid Albaqoi
Surah The Sundering, Splitting Open [Al-Inshiqaq] Ayah 25 Location Maccah Number 84
1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
3. மேலும், பூமி விரிக்கப்படும்போது,
4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
6. மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
7. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
10. எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
12. நரகத்தில் நுழைவான்.
13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
15. அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
16. (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
18 பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
21. அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
25. எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.