The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Mansions of the stars [Al-Burooj] - Tamil Translation - Abdulhamid Albaqoi
Surah The Mansions of the stars [Al-Burooj] Ayah 22 Location Maccah Number 85
1. கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக,
2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக,
3. சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
4. அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
5. அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்).
6. அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
7. நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
8. (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
10. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
11. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
12. (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
14. அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.
15. (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.
16. தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.
17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)
18. ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).
19. எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்.
20. அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
21. (இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்,
22. (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)