The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Prostration [As-Sajda] - Tamil Translation - Omar Sharif
Surah The Prostration [As-Sajda] Ayah 30 Location Maccah Number 32
அலிஃப் லாம் மீம்.
இது, (முஹம்மத் நபியின் மீது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை.
இதை (முஹம்மத்) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக! இது, உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை - அவர்கள் நேர்வழி பெறுவதற்காக - நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது).
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷ் மீது உயர்ந்தான். அவனை அன்றி உங்களுக்கு பொறுப்பாளரோ பரிந்துரையாளரோ இல்லை. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
வானத்திலிருந்து பூமி வரை உள்ள (எல்லா) காரியத்தை(யும்) அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். (பிறகு, ஒரு நாளில் அது பூமியில் இறங்குகிறது.) பிறகு, (அதே) ஒரு நாளில் அது அவன் பக்கம் உயர்கிறது. அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணுகிற(கால அளவின்)படி ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
அவன்தான் (உங்கள் பார்வைகளுக்கு) மறைவானதையும் (உங்கள் பார்வைக்கு வெளியில்) தெரிவதையும் அறிந்தவன், மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
தான் படைத்த ஒவ்வொன்றையும் அவன் செம்மையா(க, சீராக, அழகாக உருவா)க்கினான். மனிதன் படைக்கப்படுவதை களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
பிறகு, அவனது சந்ததிகளை (ஆணிடமிருந்து) வெளியேறக்கூடிய நீரிலிருந்து, மென்மையான (இந்திரிய) நீரிலிருந்து உருவாக்கினான்.
பிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தான் படைத்த உயிரிலிருந்து அவனுக்குள் ஊதினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் (மரணித்தப் பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
(நபியே) கூறுவீராக! உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர் வாங்கும் வானவர்) உங்களை உயிர் கைப்பற்றுவார். பிறகு, உங்கள் இறைவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; இன்னும், (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவியுற்றோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறுகிற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு காட்சியாக இருக்கும்).
நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் (நரகத்திற்குத் தகுதியானவர்களைக் கொண்டு) நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது.
ஆக, நீங்கள் உங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்த காரணத்தால் (நரக தண்டனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை (நரக தண்டனையில்) விட்டுவிடுவோம். இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள்!
நமது வசனங்களை நம்பிக்கைக் கொள்பவர்கள் எல்லாம் எவர்கள் என்றால் அவர்களுக்கு அவற்றின் மூலம் அறிவுரை கூறப்பட்டால் அவர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்; இன்னும், தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்களோ பெருமையடிக்க மாட்டார்கள்.
(இரவில் அவர்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதால்) அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்காக (சொர்க்கத்தில்) மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்)தை ஓர் ஆன்மாவும் அறியாது.
ஆக, நம்பிக்கையாளராக இருப்பவர் பாவியாக இருப்பவரைப் போன்று ஆவாரா? அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததன் காரணமாக “அல்மஃவா” என்னும் சொர்க்கங்கள் விருந்துபசரணையாக கிடைக்கும்.
ஆக, எவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்களோ அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக தண்டனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும்.
அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய தண்டனைக்கு முன்னர் சிறிய தண்டனையை நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம்.
தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம்.
திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைத் கொடுத்தோம். ஆகவே, அவரை (விண்ணுலகப் பயணத்தில்) சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம்.
அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகிற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்தத் தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்.
நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றித் திரிந்த எத்தனையோ பல தலைமுறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகிற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?”
(நபியே!) கூறுவீராக! “தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.”
ஆக! (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக (நீர் அவர்களுக்கு எச்சரித்ததை) அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.