The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesShe that is to be examined [Al-Mumtahina] - Tamil Translation - Omar Sharif
Surah She that is to be examined [Al-Mumtahina] Ayah 13 Location Madanah Number 60
நம்பிக்கையாளர்களே! எனது எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துகின்ற (உங்கள்) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் எனது பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும் என் பொருத்தத்தை தேடியும் வெளியேறி இருந்தால் (அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!). அவர்களோ உங்களிடம் வந்த சத்தியத்தை திட்டமாக நிராகரித்தனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் தூதரையும் உங்களையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) அவர்கள் வெளியேற்றுகிறார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பை காட்டுகிறீர்களா? நீங்கள் மறைப்பதையும் நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். உங்களில் யார் அதைச் செய்வாரோ (-அல்லாஹ்வின் எதிரிகளை தனது நண்பர்களாக எடுத்துக் கொள்வாரோ) திட்டமாக அவர் நேரான பாதையை விட்டு வழி கெட்டுவிட்டார்.
அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள். இன்னும், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். இன்னும், நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்.
உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் (அல்லாஹ்விடம்) உங்களுக்கு அறவே பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கிற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கிற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் (-இப்ராஹீமும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்) தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும், இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதைத் தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தனது தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீட்சி இருக்கிறது.”
“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை தண்டித்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
உங்களுக்கு - (அதாவது,) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசைவைப்பவராக (அஞ்சுகிறவர்களாக) இருப்பவர்களுக்கு - அவர்களிடம் (-இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன், நிறைவானவன், மகா புகழுக்குரியவன் ஆவான்.
உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, இன்னும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் (அதாவது,) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்கள் மீது அன்பு வைக்கிறான்.
நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான். அதாவது, அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு துணைபோவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கிறான்). அவர்களை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான (–நம்பிக்கை கொண்ட) பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை (-இறைநம்பிக்கையை) மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை நம்பிக்கை கொண்ட முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (-அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (உங்கள் உரிமையில்) தடுத்து வைக்காதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். (நீங்கள் அதை கொடுத்து விடுங்கள்!) இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம் மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் எந்த அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;) நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசி(த்து உங்கள் நண்பர்களாக ஆ)க்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்.