The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe reality [Al-Haaqqa] - Tamil Translation - Omar Sharif
Surah The reality [Al-Haaqqa] Ayah 52 Location Maccah Number 69
உண்மையான நிகழ்வு!
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?
ஸமூது சமுதாயமும் ஆது சமுதாயமும் (உள்ளங்களை) தட்டக்கூடிய (திடுக்கிட செய்கின்ற) மறுமை நாளை பொய்ப்பித்தனர்.
ஆக, ஸமூது சமுதாயம் அளவு கடந்த சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
ஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
அவன், அதை (-அந்த காற்றை) ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள் மீது தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆக, அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர். அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீச்ச மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் இருந்தனர்.
ஆக, அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா?
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னுள்ளவர்களும், தலைகீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர்.
ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் (-தண்டனையால்) அவன் அவர்களைப் பிடித்தான் (-தண்டித்தான்).
தண்ணீர் மிக அதிகமானபோது நிச்சயமாக நாம் உங்க(ள் முன்னோர்களான நூஹுடன் நம்பிக்கை கொண்டவர்க)ளை கப்பலில் ஏற்றினோம்.
(நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட) அ(ந்த சம்பவத்)தை உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகிற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).
ஆக, எக்காளத்தில் ஒரு முறை ஊதப்பட்டால்,
பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால்,
ஆக, அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை நாளான)து நிகழும்.
இன்னும், வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். ஆக, அந்நாளில் அது பலவீனமடைந்திருக்கும்.
இன்னும், வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் அவர்களுக்கு மேல் சுமப்பார்கள்.
அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களி(ல் ரகசியங்களி)ல் இருந்து மறையக்கூடியது எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது.
ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!”
“நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.”
ஆக, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில்,
உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.
நீங்கள் (உலகத்தில் வாழ்ந்த அந்த) முடிந்துபோன நாள்களில் (உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்திய (நல்ல) செயல்களின் காரணமாக (இந்த சொர்க்கத்தில்) இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!
ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!”
“எனது கூலி என்னவாக இருக்கும் என்று நான் அறியமாட்டேன்.”
“(உலகத்தில் எனக்கு நிகழ்ந்த எனது மரணம்,) அதுவே (எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)”
“எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!”
“எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.”
(அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!”
“பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!”
“பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.)
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்.
இன்னும், ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான்.
ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கிற) நெருக்கமான நண்பர் (யாரும்) இருக்க மாட்டார்.
இன்னும், (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.
அதை சாப்பிட மாட்டார்கள், பாவிகளைத் தவிர!
(இறை வேதத்தை பொய்ப்பிக்கின்ற பாவிகளே!) நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதன் மீது நான் சத்தியம் செய்கிறேன்!
இன்னும், நீங்கள் எதை பார்க்க மாட்டீர்களோ அதன் மீதும் (சத்தியம் செய்கிறேன்)!
நிச்சயமாக (இறைவனின் வேதமான) இது (முஹம்மது ஆகிய நமது) கண்ணியமான தூதர் மூலமாக ஓதப்படுகிற வசனங்களாகும்.
இது, கவிஞரின் பேச்சல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
இன்னும், இது ஜோசியக்காரனின் பேச்சுமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
இது, அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும்.
அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி பேசினால்,
நாம் அவரை பலமாக பிடித்திருப்போம்.
பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம்.
ஆக, உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.
நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும்.
நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு மிகத் துக்கமானதாகும்.
நிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்.
ஆக, மிக மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!