عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The tidings [An-Naba] - Tamil Translation - Omar Sharif

Surah The tidings [An-Naba] Ayah 40 Location Maccah Number 78

எதைப் பற்றி அவர்கள் (தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?

மகத்தான செய்தியைப் பற்றியா?

அதில் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். (அவர்களில் ஒருவர் மறுமை உண்டு என்றும்; இன்னொருவர் மறுமை இல்லை என்றும் கூறுகிறார்.)

அவ்வாறல்ல! (அவர்கள் அதை) விரைவில் அறிவார்கள்.

பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை) விரைவில் அறிவார்கள்.

பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?

இன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல்களாக நாம் ஆக்கவில்லையா?

இன்னும், உங்களை ஜோடிகளாகப் படைத்தோம். (எல்லாவற்றிலும் ஆண், பெண், நல்லது, கெட்டது, வானம், பூமி, நீர், நெருப்பு என இரு வகைகளை படைத்தோம்.)

இன்னும், உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.

இன்னும், இரவை (உங்களை மூடிக்கொள்கிற) ஆடையாக ஆக்கினோம்.

இன்னும், பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கான நேரமா)க ஆக்கினோம்.

இன்னும், உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.

இன்னும், பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம்.

இன்னும், கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.

அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).

இன்னும், (பழங்கள் நிறைந்த, கிளைகள்) அடர்த்தியான தோட்டங்களையும் (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்).

நிச்சயமாக தீர்ப்பு நாள் குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.

எக்காளத்தில் ஊதப்படுகிற நாளில் (அது நிகழும்). ஆக, (அந்த நாளில் நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்.

இன்னும், வானம் திறக்கப்படும். ஆக, அது, (பல) வழிகளுடையதாக மாறிவிடும்.

இன்னும், மலைகள் அகற்றப்பட்டுவிடும். ஆக, (பார்ப்பவர்களுக்கு) அது கானல் நீராக மாறிவிடும்.

நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

எல்லை மீறிகளுக்கு (-பெரும் பாவிகளுக்கு) தங்குமிடமாக இருக்கும்.

அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக் கூடியவர்களாக (இருப்பார்கள்).

(உடல்கள் மீது நரக நெருப்பின் சூட்டை தனிக்கிற) குளிர்ச்சியையோ (குடிப்பதற்கும் தாகம் தீர்ப்பதற்கும் நல்ல) ஒரு பானத்தையோ அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள்,

கொதி நீரையும், சீழ் சலத்தையும் தவிர. (இவைதான் அவர்களின் குடிபானங்களாக இருக்கும்.)

(அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்.)

நிச்சயமாக அவர்கள் (மறுமையில் தங்களது செயல்கள்) விசாரிக்கப்படுவதை பயப்படாதவர்களாக இருந்தார்கள்.

இன்னும், நம் வசனங்களை பிடிவாதமாக பொய்ப்பித்தார்கள்.

(அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.

ஆகவே, (இன்றைய தினம் நரக தண்டனையை) சுவையுங்கள்! ஆக, உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம், தண்டனையைத் தவிர!

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி (-நற்பாக்கியம்) உண்டு.

தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.

இன்னும், சம வயதுடைய, வாலிபமான கன்னிகளும் உண்டு.

இன்னும், (மதுவால்) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.

அதில் வீண் பேச்சையும், (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதையும் செவியுற மாட்டார்கள்.

உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) அருட்கொடையாக (இவற்றை வழங்கப்படுவார்கள்).

(அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் பேசுவதற்கு உரிமை பெறமாட்டார்கள்,

ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கிற நாளில். பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர பேசமாட்டார்கள். இன்னும், (பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட) அவர் சரியானதையே கூறுவார்.

அதுதான் உண்மையான நாள். (அது நிகழ்ந்தே தீரும்.) ஆக, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் (தனக்கு) மீளுமிடத்தை (-தங்குமிடத்தை) ஆக்கிக்கொள்வார்.

மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கிற நாளில் (நிகழ இருக்கிற) சமீபமான ஒரு தண்டனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் கூறுவான்: “நான் மண்ணாக ஆகிவிடவேண்டுமே” என்று.