The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Overwhelming [Al-Ghashiya] - Tamil Translation - Omar Sharif
Surah The Overwhelming [Al-Ghashiya] Ayah 26 Location Maccah Number 88
(நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?
(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.
(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.)
(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும்.
கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும்.
அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர.
(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது.
(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;
அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.
(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.
அதில் வீண் பேச்சை அவை செவியுறாது.
அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்.
அதில் உயரமான கட்டில்கள் இருக்கும்.
இன்னும், (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்.
இன்னும், (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்.
இன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.
ஆக, அவர்கள் ஒட்டகத்தின் பக்கம், அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
இன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
இன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
இன்னும், பூமியின் பக்கம், அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?
ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்.
அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை.
எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,
ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான்.
நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.
பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)