عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Star [An-Najm] - Tamil Translation - Abdulhamid Albaqoi

Surah The Star [An-Najm] Ayah 62 Location Maccah Number 53

1. விழுந்து மறையும் நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

2. (நம் தூதராகிய) உங்கள் தோழர் வழி தவறி விடவுமில்லை; தவறான வழியில் செல்லவுமில்லை.

3. அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.

4. இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.

5. (ஜிப்ரயீல் என்னும்) வலுவான ஆற்றலுடையவர் இதை அவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்.

6. அவர் மிக்க ஆத்ம சக்தியுடையவர். அவர் (தன் இயற்கை ரூபத்தில் நபி முன்) தோன்றினார்.

7. அவர் உயர்ந்த (வானத்தின்) கடைக்கோடியில் இருந்தார்.

8. இன்னும் நெருங்கினார், (அவர் முன்) இறங்கினார்.

9. (சேர்ந்த) இரு வில்களைப்போல், அல்லது அதைவிட சமீபமாக அவர் நெருங்கினார்.

10. (அல்லாஹ்) அவருக்கு (வஹ்யி மூலம்) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய (நபியாகிய) அடியாருக்கு அறிவித்தார்.

11. (நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை.

12. அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா?

13. நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்.

14. ‘‘ஸித்ரத்துல் முன்தஹா' என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில்.

15. அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சொர்க்கம் இருக்கிறது.

16. அந்த மரத்தை மூடியிருந்தவை அதை முற்றிலும் மூடிக்கொண்டன.

17. (அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை!

18. அவர் தன் இறைவனின் மிகப்பெரிய அத்தாட்சிகளையெல்லாம் மெய்யாகவே கண்டார்.

19. (நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா?

20. மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவற்றுக்கு ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா?)

21. என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா?

22. அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.

23. இவையெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களே தவிர (அவை வணங்கத் தகுதியானவை) இல்லை. அ(வை வணங்கத் தகுதியானவை என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு எந்த ஆதாரத்தையும் (முந்திய வேதங்களிலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) மன இச்சைகளையும் வீண் சந்தேகத்தையும் தவிர, (இறை வேதத்தை பின்பற்றுவது) இல்லை. நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி (இந்த குர்ஆன்) வந்தே இருக்கிறது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றுவதில்லை.)

24. மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?

25. (ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)

26. வானத்தில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். (எவருக்காகவும்)அவர்கள் பரிந்து பேசுவது ஒரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து (அவருக்காக) அவன் அனுமதி கொடுக்கிறானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு பயனளிக்காது).

27. நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்கள் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களை சூட்டுகின்றனர்.

28. இதைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் எதையும் உறுதிப்படுத்தாது.

29. (நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக.

30. இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான்.

31. வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கிறான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கிறான்.

32. (நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.

33. (நபியே!) உம்மை விட்டும் விலகியவனை நீர் கவனித்தீரா?

34. அவன் ஒரு சொற்பத்தை தர்மம் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான்.

35. அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன் முடிவை அதில்) அவன் பார்த்தானா?

36. அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளவை அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

37. (அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?)

38. (நபியே!) அறிந்து கொள்வீராக! ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்

39. ‘‘இன்னும் நிச்சயமாக மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது.''

40. நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.

41. பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப்படுவான்.

42. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது.

43. நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்.

44. நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கிறான்.

45. நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடிகளாகப் படைக்கிறான்.

46. (கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கிறான்).

47. நிச்சயமாக (நீங்கள் மரணித்தப் பின்னர் உங்களை) மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது.

48. பொருளைக் கொடுத்து (அதை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான்.

49. (இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) ‘ஷிஃரா' என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்.

50. (அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்.

51. ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) அவன் தப்பவிடவில்லை.

52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்). நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.

53. (லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான்.

54. (அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்துகொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

55. ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடைகளில் எதைத் தான் சந்தேகிக்கிறாய்?

56. முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே!

57. தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது.

58. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதைத் தடுக்க முடியாது.

59. இதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

60. (இதைப் பற்றி) நீங்கள் சிரிக்கிறீர்களே? அழ வேண்டாமா?

61. (இதைப் பற்றி) நீங்கள் கவலையற்று இருக்கிறீர்களே!

62. ஆகவே, (அவ்வாறு இருக்காமல்) அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து (அவன் ஒருவனையே) வணங்குவீர்களாக!